ராஜஸ்தான் காங்கிரசில் குழப்பம் நீட்டிப்பு- இருதரப்பிற்கும் சோனியா அழைப்பு..!!
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட விரும்பவில்லை. இதனால் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து சசிதரூர் களம் இறங்க உள்ளார். எனினும் அசோக் கெலாட், காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசி என்பதால் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்சியில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற அடிப்படையில் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலகுவார் என கூறப்படுகிறது. இதனை நேற்று அசோக் கெலாட் சூசகமாக கூறினார். இதுதொடர்பாக பேட்டி அளித்த அவர், 40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சாசன பதவிகளை வகித்து விட்டேன். இப்போது புதிய தலைமுறையினர் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.
இதனால் மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி ஆவதற்கு சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சச்சின் பைலட் புதிய முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. கோவிந்த் ராம் மேக்வால் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் கிளர்ச்சி செய்ததால் ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தான் உதவினர். இதனால் புதிய முதல்-மந்திரி யார்? என்பதை அனைத்து தரப்பினரும் ஆலோசித்து தான் முடிவு செய்ய முடியும் என்றார். அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யக்கூடாது எனவும், அவர் முதல்-மந்திரியாக தொடர வேண்டும் எனவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதனால் நேற்று இரவு தொடங்க இருந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தாமதமானது. இந்த கூட்டத்திற்காக முதல்-மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட், மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் முதல்-மந்திரி இல்லத்தில் காத்திருந்தனர். ஆனால் கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சச்சின் பைலட்டுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கூடாது என வலியுறுத்தி அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதம் வழங்கப்போவதாக மாநில அமைச்சர் பிரதாப் சிங் கச்சரியவாஸ் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை என்பது அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் நடைபெறும். கட்சியில் இடம்பெற்றிருக்கும் 102 எம்.எல்.ஏ.க்களில் யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரியாக வர முடியும். மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோரே தீர்மானிப்பார்கள் என்றார்.
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்களில் 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சச்சின் பைலட்டுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில், புதிய முதல்-மந்திரி தேர்வு செய்வதில் ராஜஸ்தான் மாநில காங்கிரசில் கடும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் மற்றும் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேரும் டெல்லி வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.