கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)
எங்கள் மகளுக்குப் பத்து வயது. இப்போதும் அவள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறாள். இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது?
– யுவராணி, சென்னை.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயல்புதான். ஆனால், பத்து வயதுக் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பது கவனிக்க வேண்டிய விஷயம்தான். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் சிறுநீர் வருவதை உணர முடியாமல் போகிறது. இதற்கு, ஹார்மோன் சமச்சீரின்மை, சிறுநீரகத் தொற்றுகள், தீவிர மலச்சிக்கல் போன்றவை காரணமாக இருக்கலாம்.
இவை தவிர சிறுநீரகப்பை முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பது அல்லது அதன் செயல்திறன் குறைவாக இருப்பது, தூக்கத்திலிருந்து எழ முடியாத அளவுக்கு ஆழமான உறக்கத்தில் இருப்பது, மரபியல் பிரச்னைகள் போன்றவையும் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களாக இருக்கலாம். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, குழந்தைகளுக்குக் கழிவறைப் பழக்கங்களை முறையாகச் சொல்லித்தர வேண்டியது அவசியம்.
சிறுவயதில் குழந்தை சிறுநீர் கழிக்கும்போது முழுமையாகக் கழிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். குறிப்பாக, தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தை, இரவு தூங்கச் செல்வதற்கு முன் முழுமையாகச் சிறுநீர் கழித்துவிட்டதா என்பதைப் பெற்றோர் அவசியம் பார்க்க வேண்டும்.மேலும், இரவு நேரத்தில் குழந்தைக்கு நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தருவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை கொடுத்துவிட்டால், சிறுநீர் கழிக்காமல் படுக்க வைக்காதீர்கள். ‘அலாரம் டெக்னிக்’ நன்றாக உதவும். தூங்க ஆரம்பித்த ஓரிரு மணி நேரம் கழித்து அலாரம் வைத்து குழந்தையை எழுப்பி, பாத்ரூம் அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்கவைத்து படுக்கவைக்கலாம். தினமும், எந்த நேரத்தில் குழந்தை சிறுநீர் கழிக்கிறதோ, அந்த நேரத்தில் இந்த முறையைப் பின்பற்றலாம்.
இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகள், தெரபிகள் உள்ளன. தெரபிகள் இறுதி நிலையில்தான் பரிந்துரைக்கப்படும். இப்போதைக்கு அவை குறித்து யோசிக்க வேண்டாம். மருத்துவ ஆலோசனை பெற்று, குழந்தையின் உடலில் சிறுநீர் உற்பத்தி அளவைக் குறைக்கும் மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கலாம். சிறுநீரகத்தின் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, அதன் செயல்திறனை அதிகரிக்கும் மாத்திரைகள் தேவைப்படும் என்பதால், அவற்றைக் கொடுக்கலாம்.
தேவைப்பட்டால் மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளும் வழங்கப்படும். பெண் குழந்தை, பருவ வயதை அடைந்தால் சிக்கல் பெரிதாகும். எனவே, பிரச்னையை விரைந்து சரிசெய்ய தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
சில நாட்களாக தீவிரமான தலைவலி இருக்கிறது. சில நேரங்களில், தலைவலிக்கும்போது கண்கள் மங்கலாகி, மயக்கம் வருவதுபோல இருக்கிறது. பெரும்பாலும் பின்னந்தலைதான் அதிகம் வலிக்கிறது. மாத்திரை, தைலம், வெந்நீர் ஒத்தடம், ஹெட் மசாஜ் என அனைத்தையும் செய்துவிட்டேன். சரியாகவில்லை. மூன்று வாரங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இப்போது தீவிரமாகியிருக்கிறது. சி.டி ஸ்கேன் செய்து பார்த்துவிட்டேன். `ஒன்றும் பிரச்னை இல்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள். சரியாகத் தூங்க முடியாமல் தினமும் அவதிப்பட்டுவருகிறேன்.
இது எதனால் ஏற்படுகிறது, குணப்படுத்துவது எப்படி?
– அப்துல் சமீது, கோவை.
சி.டி ஸ்கேனில் தலையின் எலும்புப் பகுதிகள், ரத்த நாளங்கள் தொடங்கி, மூளையிலுள்ள எல்லாப் பகுதிகளுமே பரிசோதிக்கப்படும். ஏதேனும் பாதிப்பு இருந்தால், அதில் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். உங்களுக்கு அப்படி எந்த பாதிப்பும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனால் பயப்படத் தேவையில்லை. தலைவலியில் பலவகை உள்ளன. ஒற்றைத் தலைவலி, பின்னந்தலை வலி என எந்த வகை வலி உங்களுக்கு உள்ளதென தெரிந்தால் அதற்கேற்ற தீர்வைச் சொல்லலாம்.
பொதுவாக, தலையில் நீர்கோத்துக் கொண்டாலும், கண்களில் பிரச்சனை இருந்தாலும், சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் தலைவலிக்கும். சிலருக்கு வெயிலில் அதிகம் அலைவதாலும், போதுமான உறக்கமின்மை, நீர்ச்சத்துக் குறைபாடு போன்றவற்றாலும் தலைவலி வரும்.
எந்தவகைத் தலைவலியாக இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரையின்றி தலைவலி மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். கண்களில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும், இதுபோல பின்னந்தலையில் வலி ஏற்படலாம். எனவே, கண் பரிசோதனை செய்து பார்க்கவும். தூங்கும்போது ஒருபக்கமாகச் சாய்ந்து படுப்பதால்கூட கழுத்துவலி உண்டாகி அதன் விளைவாகத் தலைவலி வரலாம்.
எந்த வேலையைச் செய்யும்போதும், முதுகுத்தண்டுவடம் நிமிர்ந்தோ அல்லது நேர்க்கோட்டில் இருப்பதுபோலவோ அமைத்துக்கொள்வது நல்லது. வலி உணர்வு குறையவில்லை என்றால் மனநல ஆலோசனை, கவுன்சலிங் பெற்றுக்கொள்ளவும்.