இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும்- பாதுகாப்பு மந்திரி உறுதி..!!
நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நத்சிங் கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு என்றென்றும் கடன் பட்டுள்ளது. ஒழுக்கம், கடமையில் அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தியாகம் மூலம் மக்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கு பாதுகாப்பு படையினர் எப்போதும் உந்து சக்தியாக திகழ்கின்றனர்.
பின்னணியோ, மத நம்பிக்கையோ அவர்களுக்கு ஒரு பொருட்டு கிடையாது. நம்முடைய மதிப்பிற்குரிய மூவர்ணக் கொடி தொடர்ந்து உயரத்தில் பறக்கவேண்டும் என்பது முக்கியம். நமது ராணுவத்தின் துணிச்சல் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒரே நாடு இந்தியா. அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக எந்த நாடும் தவறாக நினைக்கக்கூடாது. எந்த ஒரு நாட்டையும், இந்தியா தாக்கவில்லை, ஒரு இஞ்ச் அன்னிய நாட்டு நிலத்தைக்கூட கைப்பற்றவில்லை. இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு யாராவது ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும். வடக்கு எல்லைப்பகுதியில் சீனாவுடன் நமக்கு கருத்து வேறுபாடு உள்ளது.
எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும், அது பொருட்டல்ல என்பதை கல்வான் சம்பவம் மூலம் நமது தைரியமிக்க வீரர்கள் நிரூபித்தனர். நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய இந்தியாவை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது. அதற்கு தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.