இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசனுடன் சந்திப்பு..!!
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் லார்ட் வேவர்லி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, அவரது இல்லத்தில் சந்தித்தார். உலகளாவிய கலாசாரத்தை உலகெங்கும் பறைசாற்றுவதிலும் சகவாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கு குறித்து இருவரும் விவாதித்தனர் .
சமீபகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், இலக்கியம், சினிமாவில் முதலீடு, தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது, “கமல்ஹாசன், இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்து ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டு, உலகில் அவர்களின் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர்” என்று லார்ட் வேவர்லி தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தற்போது உள்நாடு, வெளிநாடு என உலகெங்கும் உள்ள சிக்கல்களை எத்தகைய சூட்சுமத்தோடு அணுக வேண்டும் என்பது குறித்தும், அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர் . பின்னர் கமல்ஹாசன் கூறும்போது “நம்முடைய மக்கள் மற்றும் மக்களின் வளர்ச்சியைப் பற்றிய அறிவை உலகத் தலைவர்களுடன் விவாதிப்பதிலும் , அவர்களுடன் பரிமாறிக் கொள்வதிலும் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. லார்ட் வேவர்லி என்னை சந்தித்ததற்கு நன்றி, விரைவில் மீண்டும் சந்திப்போம்” என்று தெரிவித்தார்.