57 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் இணைப்பு கிடைத்ததால் கிராம மக்கள் கொண்டாட்டம்..!!
இந்தியாவில் முதல் எல்.பி.ஜி. சிலிண்டர் இணைப்பு 1965-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கடந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது அருணாச்சல பிரதேசத்தில் மியான்மார் எல்லையையொட்டிய சாங்லாங்க் மாவட்டத்தின் மியாவ், டிவிஷன் பகுதிக்குட்பட்ட விஜயநகர் என்ற கிராமத்தில் சுமார் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 157 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பகுதிக்கு நீண்ட காலமாகவே சாலை வசதி இல்லாமல் இருந்தது.
மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு சிலிண்டர் இணைப்புக்கான ஆவணங்கள் இல்லாததால் நீண்டகாலமாக சிலிண்டர் இணைப்பு இல்லாமல் இருந்தது. இதனால் இந்த கிராம மக்கள் சமையலுக்கு விறகுகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக் காலங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். தங்களுக்கு சிலிண்டர் இணைப்பு கேட்டு மாநில அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து தற்போது அந்த கிராம மக்களுக்கு எல்.பி.ஜி. சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளதாக மந்திரி கம்லுங் மொசாங் கூறினார்.