யாழ் மாநகர ஆணையாளரைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு!!
யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளில் சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியாமல் ஆணையாளர் எதேச்சையாக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா தொடர்பில் முடிவெடுத்தமையைக் கண்டித்த சபை உறுப்பினர்கள் சிலர் ஆணையாளர் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக ஆணையாளர் தவறை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜப்பானியத் தூதரகத்தினால் அனுப்பப்பட்ட வரைபின் படியே ஆணையாளர் கடித்த்தில் கையொப்பமிட்டார் என முதல்வர் தெரிவித்தார். இதனைப் பரிகசித்த உறுப்பினர்கள் ஆணையாளர் யாழ்ப்பாண மாநகர சபைக்கு ஆணையாளரா? அல்லது ஜப்பானிய மாநகர சபைக்கு ஆணையாளரா? எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து வாக்குவாதங்கள் இடம்பெற்ற போதும் உறுப்பினர்கள் கோரியபடி ஆணையாளர் மற்றும் முதல்வர் தவறை ஏற்றுக்கொள்ளாத்தனால், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
இவ்வாறு உறுப்பினர்கள் வெளியேறியதையடுத்து போதிய கோரம் இல்லாத காரணத்தினால் சபை அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஜப்பானியத் தூதரகத்தினால் அன்பளிப்புச் செய்யப்படவிருந்த நவீன திண்மக் கழிவகற்றல் வாகனங்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அவ் வாகனங்களின் தீர்வை மற்றும் இதர செலவுகளுக்காக ஜப்பானியத் தூதரகத்தினால் யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்ட ரூபா ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ஐத் திரும்பச் செலுத்துவது தொடர்பில், மாநகர சபைக்குத் தெரியப்படுத்தாமல் “பணத்தைத் திரும்பச் செலுத்த முடிவு செய்துள்ளோம்” என சபை சார்பில் ஆணையாளர் அனுப்பிய கடிதம் தொடர்பான சர்ச்சையை அடுத்து உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் மூடுமந்திரமாக சபை நடாத்தப்படுவதைக் கண்டத்து, ஆணையாளர் சபையில் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியுமே உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”