மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி பயணம்..!!
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி செல்ல உள்ளார்.
மந்திரிசபை விஸ்தரிப்பு
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. பசவராஜ் பொம்மை பதவி ஏற்று ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டாக மந்திரிசபையில் 4 இடங்கள் காலியாக இருந்தன. சமீபத்தில் மந்திரிகள் ரமேஷ் ஜார்கிகோளி, ஈசுவரப்பா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மந்திாிசபையை விஸ்தரிக்க அனுமதி வழங்குமாறு பா.ஜனதா மேலிட தலைவர்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கைக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மந்திரிசபையை விரைவாக விஸ்தரிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஈசுவரப்பா, ரேணுகாச்சார்யா உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகிறார்கள்.
பணிச்சுமை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வசம் பெங்களூரு நகர வளர்ச்சி, நிதி உள்பட பல்வேறு துறைகள் இருப்பதால் அவருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் வளர்ச்சி பணிகளை துரிதகதியில் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மந்திரிசபையை விரைவாக விஸ்தரிக்க வேண்டும் என்ற குரல் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி செல்ல இருக்கிறார். அங்கு பா.ஜனதா மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து இதுபற்றி விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது மந்திரிசபையை விஸ்தரிக்கவும், மந்திரிசபையில் இருந்து சரியாக செயல்படாத சில மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.