உக்ரைன் போர் மனிதநேயம் சார்ந்த இந்தியாவின் அணுகுமுறை தொடரும்: ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி பேச்சு..!!
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரானது ஆறு மாதங்களை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. இரு தரப்பிலும், பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த சூழலில், இரு நாடுகளும் தீவிர மோதலில் ஈடுபட்டு உள்ளன. ரஷியா அணு ஆயுத தாக்குதலை நடத்த கூடும் என்று உக்ரைன் அதிபர் சமீபத்தில் அச்சம் வெளியிட்டார்.
போரை நிறுத்த இந்தியா உள்பட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்றும் கூறி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, உக்ரைன் போரில் மனிதநேயம் அடிப்படையிலான விசயங்களை மையப்படுத்திய இந்தியாவின் அணுகுமுறை தொடரும்.
இதனை சந்தேகத்திற்கு இடமின்றி பிரதமர் மோடி, தாஷ்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் புதினுடனான சந்திப்பின்போது கூட, குறிப்பிட்டார் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சர்வதேச நகர்வானது, சர்வதேச சட்டம், ஐ.நா. அமைப்பு மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மதிக்கும் வகையில் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
நாங்கள் மனிதநேயம் சார்ந்த உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருவதோடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தென்பகுதியிலுள்ள சில அண்டை நாடுகளுக்கும் பொருளாதார உதவிகளை செய்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.