யாழ் மாவட்டத்தில் வாழ்வாதார உதவித் திட்டங்களை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்ற, சமூக நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (27) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் UNDP நிறுவனத்தினால் யாழ். மாவட்டத்தின் சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, சங்கானை, உடுவில், கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், கண்காணிப்பு மேற்கொள்ளல் ஆகியன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தல், இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கும் பயிற்சி நெறிகளை ஆரம்பித்தல், மொழித்திறன் பயிற்சி வழங்குதல், பெண்களுக்கான உதவித்திட்டங்கள் வழங்குதல் முதலான திட்டங்களுடன், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வுகள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட பதிவாளர் நாயகம், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், UNDP திட்ட இணைப்பாளர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”