பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீது அடுத்த மாதம் விசாரணை- சுப்ரீம் கோர்ட்..!!
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் வருகிற அக்டோபர் 12-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்தது. நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.
இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாக ரத்னா ஆகியோர் இடம் பெற்று உள்ளார். மொத்தம் 58 மனுக்கள் தாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் 2016-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டவை. அப்போது விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்பின் அந்த அமர்வு அமைக்கப்படாமல் இருந்ததால் மனுக்கள் மீதான விசாரணை நடைபெறாமல் இருந்தது. தற்போது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு உள்ளதால் விசாரணை தொடங்குகிறது.