கேரளாவில் ஆயர் மீது செக்ஸ் புகார் கூறிய கன்னியாஸ்திரி திடீர் போராட்டம்..!!
கேரள மாநிலம் கல்பேட்டாவில் உள்ள கன்னியர் மடத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி லூசி களப்புரக்கல். இவர் ஜலந்தர் ஆயர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே கன்னியாஸ்திரி லூசி களப்புரக்கலை கன்னியர் மடத்தில் இருந்து வெளியேற்ற மடத்தின் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனை எதிர்த்து கன்னியாஸ்திரி லூசி களப்புரக்கல் மானந்தவாடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த கோர்ட்டு கன்னியாஸ்திரி லூசி களப்புரக்கல் அங்குள்ள கன்னியர் மடத்தில் தங்கி இருக்க அனுமதி வழங்கியது. மேலும் அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் கன்னியாஸ்திரி லூசி களப்புரக்கல் நேற்று காலை திடீரென தான் தங்கியிருந்த கன்னியர் மடம் முன்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.
மடத்தின் நிர்வாகிகள் தன்னை அங்கிருந்து வெளியேற்ற உளவியல் பூர்வமாக முயற்சி செய்வதாகவும், தன்னிடம் பேசாமல், அடிப்படை வசதிகளை வழங்காமல் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். கன்னியாஸ்திரி லூசி களப்புரக்கல் நடத்திய போராட்டம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு ஏராளமானோர் திரண்டனர். இவர்களில் சிலர் கன்னியாஸ்திரி லூசி களப்புரக்கல் போராட்டத்தை தடுக்க முயன்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.