;
Athirady Tamil News

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

0

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினார்கள்.

அவர்கள் கூறியதாவது:
விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி 34 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால், அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

இதன்மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். சிவில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் இது பொருந்தும். மேலும், புதுடெல்லி, அகமதாபாத் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி ஆகிய ரெயில் நிலையங்களை மறுமேம்பாடு செய்வது தொடர்பான இந்திய ரெயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது. இதன்மூலம் 34744 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். லட்சக்கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவம் மேம்படும். உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.