இந்திய நாகரிகத்தின் அடையாளம் பகவான் ராமர்- பிரதமர் மோடி..!!
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள லதா மங்கேஷ்கர் சதுக்கத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பகவான் ராமர் நமது நாகரிகத்தின் அடையாளம், நமது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம் , கடமை ஆகியவற்றில் வாழும் லட்சியமாக அவர் இருக்கிறார். அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் ராமர் இடம் பெற்றுள்ளார். ஸ்ரீராமரின் ஆசீர்வாதத்துடன் அயோத்தியில் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருவதைக் கண்டு நாடு முழுவதும் மகிழ்ச்சி அடைகிறது. அயோத்தியின் பிரமாண்ட கோவிலுக்கு பகவான் ஸ்ரீராமர் வரப் போகிறார். இது அயோத்தியின் பெருமைமிக்க பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தும் நடவடிக்கை. இது தேச வளர்ச்சி மற்றும் அயோத்தி நகரின் வளர்ச்சியின் புதிய அத்தியாயம்.
அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் சதுக்கத்தில் நிறுவப்பட்ட அன்னை சரஸ்வதியின் பிரமாண்டமான வீணை, இசைப் பயிற்சியின் அடையாளமாக மாறும். சதுக்கத்தில் உள்ள ஏரியில் ஓடும் நீரில் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட 92 வெள்ளைத் தாமரைகள் சகோதரி லதாவின் வாழ்நாளை குறிக்கிறது.
ராம பக்தர்கள், கடவுளின் வருகைக்கு முன்பே வந்து விடுவார்கள்.எனவே, லதா மங்கேஷ்கர் சதுக்கம், பிரமாண்ட ராமர் கோவில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை, கலை மற்றும் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் கொண்டு செல்வது நமது கடமை. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.