பி.எப்.ஐ. மீதான தடையை எதிர்ப்பவர்கள், நாட்டிற்கு எதிரானவர்கள்- ஆர்.எஸ்.எஸ்..!!
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பின் மீது தடை விதித்துள்ளதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கடசிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளதாவது:
பி.எப்.ஐ.மீதான தடை காலத்தின் மிகப் பெரிய தேவையாக இருந்தது. நாடு மற்றும் மனித நேயத்தை பாதுகாக்க மத்திய அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது. இந்த தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.
இந்த தடையை எதிர்ப்பதன் மூலம், அவர்கள் வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இன்று ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்யக் கோரும் அனைத்துத் தலைவர்களும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் போராட்டமும், அவர்களின் தியாகமும்தான் இந்தத் தலைவர்கள் அனைவரையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பை பாதுகாத்ததுடன், நாடு சர்வாதிகார ஆட்சிக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.