3-வது நாள் பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் பவனி..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி சமேத ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனா். 2-வது நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது.
சாமி வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக் குழுவினர் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி அசத்தினர். புதுச்சேரியின் பம்பை ஆட்டம், கேரளாவின் செண்டை மேளம், டிரம்ஸ், மகாராஷ்டிராவின் பாரம்பரிய நடனம், ஒடிசா குழுவினரின் கோலாட்டம் ஆகியவை பக்தர்களின் கண்களை கவர்ந்தன. விசாகப்பட்டினத்தின் லலிதா பஜனை மண்டலி குழுவினரின் பல்வேறு தெய்வங்களின் வேடம், மேற்கு கோதாவரியின் தேவாரப்பள்ளி நடனம் போன்றவை.
பக்தர்களின் மனதை கவர்ந்தது. 3-வது நாளான இன்று காலை ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். அப்போது மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர பத்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். இன்று மாலை முத்து பல்லக்கு வாகன சேவையில் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். திருப்பதியில் நேற்று 64,823 பேர் தரிசனம் செய்தனர்.22,890 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.03 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.