திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!
திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.
அதன் விவரம் வருமாறு:-
சில சமயங்களில் பெண்கள் வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களை அதில் இருந்து காப்பாற்ற இந்த சட்டம் அனுமதிக்கிறது. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை போலவே திருமணமாகி வலுக்கட்டாயமாக கர்ப்பம் தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை உண்டு.
கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பாற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டும். திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு.
கருக்கலைப்பு சட்டத்தின்படி திருமணமான பெண்கள், கணவரை இழந்த பெண்கள் தங்களது 24 வார கால கருவை கலைக்க உரிமை உண்டு. தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே உள்ளது என சுருக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.