செந்தில் பாலாஜி மீதான வழக்குக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்: ஐகோர்ட்டில், அரசு தரப்பில் மனு..!!
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில், ஒரு வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
தடை நீக்கம்
அதன்படி இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதேபோல, சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோசடி வழக்குகளை ரத்து செய்யக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.
மத்திய அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் என்.ரமேஷ், ”இந்த வழக்கில் அமலாக்கத்துறையையும் ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும். இந்த வழக்கில் அமைச்சரும், அரசும் உள்ளனர். அதனால், இந்த வழக்கின் பல விவரங்களை ஐகோர்ட்டுக்கு அமலாக்கப்பிரிவுதான் தெரிவிக்க முடியும்” என்று கூறினார்.
தள்ளிவைப்பு
இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 18-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.