விமான நிலையத்தில் ரூ.13 கோடி போதைப்பொருளுடன் பெண் கைது..!!
மும்பை விமான நிலையத்தில் ரூ.13 கோடி போதைப்பொருளுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவல்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைதடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விமான நிலையத்தில் பயணிகளை கண்காணித்து வந்தனர். அப்போது பிரேசிலில் இருந்து வந்த பெண் ஒருவர் கோவா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய நடமாடி வந்ததை கண்டனர். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அப்பெண்ணிடம் விசாரித்தனர். பொலிவியா நாட்டை சேர்ந்த அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
2 பேர் சிக்கினர்
போலீசார் அவர் வைத்திருந்த உடைமைகளில் சோதனை போட்டனர். இதில் கருப்பு கலரில் இருந்த 3 கிலோ 200 கிராம் எடையுள்ள கொகைன் போதைப்பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.13 கோடி ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நடத்திய விசாரணையில் அடிஸ்அபாவில் இருந்து மும்பை வழியாக கோவாவை சேர்ந்த நைஜிரீயா நாட்டை சேர்ந்த பிரஜைக்கு வினியோகம் செய்ய முயன்றது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று நைஜிரீயா பிரஜையைும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.