ஹார்ட் அட்டாக் Vs கார்டியாக் அரெஸ்ட்!! (மருத்துவம்)
ஒரு விளக்கம்!
மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக் மற்றும் சடன் கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம் இரண்டும் வேறு வேறு. ஆனால், இன்னமும் பலருக்கும் இவ்விரண்டுக்குமான வித்தியாசம் தெரியவில்லை.
மாரடைப்பு
இதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Caronary) ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படுவதைத் தான் மாரடைப்பு (Heart Attack) எனச் சொல்வார்கள். மாரடைப்பு ஏற்படும் போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான பாரம் ஏற்படுவது போல தோன்றும். பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு சுய நினைவு இருக்கும், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.
கழுத்து மற்றும் இடது கை பகுதி
களில் வலி ஏற்படும், வியர்த்துக் கொட்டி, மூச்சு வாங்கும். இதை வைத்தே தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என ஒருவர் சந்தேகப்பட முடியும்.மாரடைப்பு வரும் அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் ஆஸ்பிரின், டிஸ்பிரின் முதலான மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள், மாத்திரையை விழுங்கும் வடிவத்திலும், உதட்டுக்குள் வைக்கும் முறையிலும் இவை மருந்தகங்களில் கிடைக்கும். மருத்துவர் ஆலோசனை பெற்று, இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் தனக்குத் தானே முதலுதவி செய்து கொள்ளலாம். பின்னர் உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்கு சென்றால், அங்கே மருத்துவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைகளை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும்.
மாரடைப்பு வந்த பின்னர் எவ்வளவு விரைவில் மருத்துவமனை செல்கிறோமோ அந்த அளவுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும், எதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சைகள் (ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, இதய அறுவை சிகிச்சைகள்) மேற்கொள்ளப்படும்.
சடன் கார்டியாக் அரெஸ்ட்
மருத்துவர்கள் இதை தீடீர் இதயத் துடிப்பு முடக்கம் என சொல்கிறார்கள். எந்த வித அறிகுறி இல்லாமலும்கூட இந்தப் பிரச்னை வரலாம். நமது இதயம் குறிப்பிட்ட கால அளவுக்கு ஏற்றவாறு, சீரான எலெக்ட்ரிக் பல்ஸ் இருக்கும்போது, சரியாக பம்ப் செய்யும். இதயம் பம்ப் செய்யும்போதுதான் மூளை, நுரையீரல், சிறுநீரகம் என அத்தனை பகுதிக்கும் சீராக இரத்தம் செல்லும்.
எலெக்ட்ரிக் பல்ஸ் திடீரென தாறுமாறாக மாறினால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இவ்வாறு சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் உண்டு. அதில் ஒரு காரணிதான் மாரடைப்பு.
கிட்டத்தட்ட மரணம் அடைபவர்கள் அனைவருக்குமே கடைசி நேரத்தில் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து இறப்பார்கள். தூக்கத்தில் சிலர் இறந்து விடுவதை மாரடைப்பு வந்து இறந்தார்கள் எனச் சொல்வார்கள், இது தவறு, தூக்கத்தில், உடலில் என்ன நடக்கிறது எனத் தெரியாமேலேயே ஒருவர் இறந்தால் அவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden Cardiac Arrest)
ஏற்பட்டிருக்கக் கூடும்.
சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்தால் தப்பிக்க முடியுமா?
அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மாரடைப்பு என்பது நோய், ஆனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் என்பது நோய் கிடையாது. தண்ணீரில் மூழ்கி இறக்கிறவர்கள், தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறவர்கள், மருந்து குடித்து தற்கொலை செய்பவர்கள், விபத்து என அத்தனை முறையிலும் கடைசியில் ஏற்படுவது கார்டியாக் அரெஸ்ட்தான்.
ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பின்னர், முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10% குறைகிறது. சி.பி.ஆர் எனச் சொல்லப்படும் முதலுதவி தருவதன் மூலமாக இவர்களின் உயிரை காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது, மேலை நாடுகளில் இந்த செயல்முறை வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுகிறது, இந்தியாவில் இந்தச் செயல்முறை இன்னும் சரியாக மக்களுக்கு தெரிவது இல்லை.
முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்த பின்னர், உடனடியாக எதனால் சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்திருக்கிறது என பார்க்க வேண்டும். ஒருவேளை இதய நோய்கள் காரணமாக ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சைகளைத் தொடர வேண்டும். மாரடைப்பு காரணமாக இருந்தால் அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிர் பிழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆஞ்சியோபிளாஸ்டி
பலூன் சிகிச்சைமுறை என வழக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டிருந்து, ரத்த குழாய்கள் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் இந்த சிகிச்சை தரப்படுகிறது. ஆஞ்சியோகிராம் மூலமாக எந்த ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டுபிடித்த பின்னர் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். இது அறுவை சிகிச்சை கிடையாது, மயக்க மருந்துகள் தேவையில்லை.
எந்த ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா, அங்கே ரேடியோ ஆர்ட்டரி மூலமாக உள்ளே செலுத்தப்படும் ஒயரில் இரண்டு செ.மி அளவில் சுருங்கி விரியும் தன்மை உடைய பலூன் செலுத்தப்படும். அடைப்பு இருக்கும் இடத்துக்கு கொண்டு சென்று, பலூனை விரிவடைய வைக்கும் போது, அடைப்பு நீங்கி இரத்தம் பாயும். இந்த சிகிச்சை முறையில் சிலருக்கு தேவைப்பட்டால் ஸ்டன்ட் வைப்பார்கள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மீண்டும் அடைப்பு ஏற்படலாம் என்ற வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஸ்டன்ட் வைக்கப்படும். இதன் மூலம் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
எக்மோ
எக்ஸ்டரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன் (Extra Corporeal Membarane Oxygenation) என்பதனைத்தான் எக்மோ (ECMO) எனக் குறிப்பிடுகிறார்கள். திடீரென ரத்த அழுத்தம் குறைவது, மாரடைப்பு ஏற்படுவது போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் எனும் சூழ்நிலை வரும்போது, இந்தக் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரலின் பணிகளை இது செய்யும். இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் போதே இதயம் மற்றும் நுரையீரலில் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான அடுத்தக் கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இது பலனளிக்காத பட்சத்தில் இதய மாற்று அறுவைசிகிச்சைதான் தீர்வு. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரைக்கும் எக்மோ கருவியைப் பயன்படுத்த முடியும்.