;
Athirady Tamil News

பேஸ்மேக்கர் சந்தேகங்கள்!! (மருத்துவம்)

0

நம் இதயத் துடிப்புக்கும், பல்வேறு உடல் மற்றும் உணர்வுகளின் தேவைக்கேற்ப இதயத்துடிப்பு விகிதப் பராமரிப்புக்கும் இதயம் உற்பத்தி செய்யும் மின்சாரமே காரணமாகும். இதயத்தின் மின் கட்டமைப்பு நோய்வாய்ப்பட்டால் இந்த மின் ஆற்றலை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும் அல்லதுதேவைக்கேற்ப இதயத்துடிப்பு விகிதத்தைப் பராமரிக்கத் தவறும். இத்தகைய சூழலில் பேஸ் மேக்கர் தேவைப்படும்.

நோயாளிக்குப் பேஸ் மேக்கர் தேவையா என்பதை எவ்வாறு கண்டறிவது?

நோயாளிக்குப் பேஸ் மேக்கர் தேவையா இல்லையா என்பதை இசிஜி பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். இது தவிர ஹாட்லர் மானிடரிங்க், இஎல்ஆர் லூப் ரிக்கார்டர், கார்டியாக் எக்கோ கார்டியோகிராஃபி போன்ற பரிசோதனைகளும் இருக்கின்றன.

பேஸ் மேக்கர் கருவியால் ஏதேனும் பாதிப்பு உண்டா?

நோயாளியின் நோய்க்குறிகளை தீவிரமாகப் பரிசோதித்த பிறகே அறுவை சிகிச்சை செய்யப்படும். எனவே பேஸ்மேக்கர் பொருத்துவதால் எந்தப் பாதிப்பும் இல்லை. பேஸ் மேக்கர் பொருத்தியவுடன், அது புற உறுப்பு என்பதால் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உடனடியாக நோயாளிக்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தரப்படும். இதைத் தவிர கவலைப்பட ஏதுமில்லை. உலகெங்கும் சுமார் 3 மில்லியன் மக்கள் நிரந்தர பேஸ் மேக்கர் கருவிகள் பொருத்தப்பட்டு நலமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,00,000 பேஸ் மேக்கர்கள் பொருத்தப்படுகின்றன.

பேஸ் மேக்கர் கருவிகளில் காணப்படும் சமீபத்திய முன்னேற்றம் என்னென்ன?

பேஸ் மேக்கர் கருவியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள மின்கலத்தின் ஆயுளும் 10-12 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை பேஸ் மேக்கரிலுள்ள பல்வேறு மென்பொருள்கள் தூக்கத்தில் மூச்சுத் திணறல், இதயக் கோளாறுகள் ஆகிய உடல் நல பாதிப்புகளைக் கண்டறியவும் உதவும்.

பேஸ்மேக்கர் பொருத்திக் கொண்டவர்கள் வாகனம் ஓட்டலாமா?

பேஸ் மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளிகள் மற்றவர்களைப் போலவே இயல்பு வாழ்க்கை வாழலாம். வாகனம் ஓட்டுதல், பயணம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட இயல்பான செயல்களில் ஈடுபடலாம். இருப்பினும் ஒவ்வொரு நோயாளி யையும் தனிப்பட்ட முறையில் பரிசோதித்து முடிவெடுக்க வேண்டும் என்பதால், வாகனம் ஓட்டுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.

பேஸ் மேக்கர் சிகிச்சைக்கு அரசு உதவி உண்டு. CGHS திட்டம் அல்லது முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பேஸ்மேக்கர் சிகிச்சை செய்துகொள்ளலாம். இதுதவிர வழக்கமான தனிநபர் சொந்த காப்பீடு அல்லது பணியாற்றும் நிறுவனங்கள் வழங்கும் காப்பீட்டின் மூலமும் பேஸ்மேக்கர் பொருத்திக் கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.