;
Athirady Tamil News

புதிய வாழ்க்கைமுறையை கற்றுக்கொள்வோம்!! (மருத்துவம்)

0

தொற்றுநோய் தொடர்ந்து பரவி வரும் இந்த சூழலில் தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள நபர்களையும் எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். நீரிழிவு உள்ளிட்ட இணை நோய் மற்றும் புகை பிடித்தல் போன்றவை இந்த நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். எனவே, தொற்றுநோய்களின்போது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி உங்கள் இதயத்தை வலிமையாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

New normal என்ற இந்த புதிய வாழ்க்கைமுறையில் சமூக விலகல் மற்றும் வீட்டி லிருந்து அலுவலக பணி உள்ளிட்ட காரணங்களால் மக்கள் நீண்ட நாட்களாக வீடுகளிலேயே இருக்கின்றனர். மேலும் இவர்களில் பலர் தொற்று பரவிவிடுமோ என்ற பயத்தின் காரணமாக மருத்துவமனைகளுக்கு சென்று தங்களின் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்யாமல் அதை தள்ளிப்போடவும் மற்றும் ரத்தும் செய்துவிடுகிறார்கள்.

உடற்பயிற்சி இல்லாமை மற்றும் தனிமைப் படுத்தப்படுதல் போன்றவை மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கிறது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களை மேலும் மோசமாக்குகிறது. இந்த சவாலான காலத்தில், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது, உங்கள் ரத்த அழுத்தத்தை சீராக கண்காணிப்பது மற்றும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதும் மிகவும் முக்கியம் ஆகும்.

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இதய நோய் வராமல் தடுக்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள்.

* உங்கள் பணிகளை செய்வதற்கு முறையாக நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் வீட்டில் அதிக நேரம் செலவிட்டாலும், உங்கள் தினசரி வழக்கத்தை பின்பற்றுவது என்பது மிகவும் முக்கியம் ஆகும். போதுமான நேரம் தூங்குங்கள், சரியான நேரத்தில் சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள், உங்கள் தினசரி பணிகளைச் செய்யுங்கள் மற்றும் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

* இந்த கடினமான சூழலில் உங்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான மன நிலையை பராமரிப்பது என்பது இன்னும் அவசியம் ஆகும். உங்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுங்கள். இது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு உங்களின் உணர்ச்சிபூர்வமான வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

* அதிக நார்ச்சத்து, குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கொண்ட இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். அதிக சோடியம் அல்லது கொழுப்புகள் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். உங்களின் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான உணவுகள் என்ன என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

* தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது எழுந்து உங்கள் கை கால்களை உதறுங்கள் மற்றும் சற்று நடந்து வாசல்படி வரை சென்றுவாருங்கள். நாள்தோறும் சாதாரணமான உடற்பயிற்சியை செய்யுங்கள். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான உடல் அமைப்பு இருக்கும். அதற்கேற்ப அதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்படுங்கள். உங்கள் உடலை பற்றி நீங்கள் மட்டுமே நன்கு அறிவீர்கள். எனவே நீங்கள் உங்கள் உடலை தொடர்ந்து கண்காணித்து அதில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கண்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகி அது சம்பந்தமாக ஆலோசனை பெறுங்கள்.

* தற்போது தொடரும் இந்த தொற்று நோய் காலத்தில் நோயாளிகளை பாதுகாப்பாக வைத்திருக்க தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது என்பது சிறந்த ஒன்றாகும்.

* முகக்கவசம் அணியுங்கள். முகத்தை தொடுவதை தவிர்த்திடுங்கள். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள். குறைந்தபட்சம் 20 விநாடிகள் கைகளை கழுவவும், மேலும் உங்கள் கைகளின் பின்புறம், விரல் இடுக்குகள் மற்றும் கட்டைவிரல் போன்ற இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி நன்றாக தேய்த்து கழுவுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். பொது இடங்களில் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் 6 அடி தூர இடைவெளியை கடைபிடியுங்கள்.

* தொற்று பரவும் இந்த சவாலான காலக்கட்டத்தில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்; ஆரோக்கியமாக இருங்கள். ஆரோக்கியமான இதயம் நலமான வாழ்க்கைக்கு முக்கியமாகும். நோய் வந்த பின் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதைக் காட்டிலும் அது வராமல் தடுப்பதே சிறந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.