யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஐப்பசி 06 முதல் 08 வரை ! மூன்று நாள்களில் எட்டு அமர்வுகள் : 2 ஆயிரத்து 377 பேருக்குப் பட்டங்கள்!!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஐப்பசி 06 முதல் 08 வரை ! மூன்று நாள்களில் எட்டு அமர்வுகள் : 2 ஆயிரத்து 377 பேருக்குப் பட்டங்கள்!!
184 பேருக்குப் பட்டப்பின் தகைமை
2 ஆயிரத்து 40 பேருக்கு உள்வாரி பட்டங்கள்
153 பேருக்கு தொலைக்கல்விப் பட்டங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் ஐப்பசி மாதம் 06 ஆம், 07 ஆம், 08 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதல் இரண்டு நாள்களும் தலா மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் இரண்டு அமர்வுகளுமாக எட்டு அமர்வுகளில் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. 184 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 40 உள்வாரி மாணவர்களுக்கும், 153 தொலைக்கல்வி மாணவர்களுக்கும் இதன் போது பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தின் வேந்தர், தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கவுள்ளார்.
உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், வணிக முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், மருத்துவ பீடம், பொறியியல் பீடம், தொழில் நுட்ப பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மற்றும் வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகத்தை)ச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்பட்ட தொலைக்கல்விப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 184 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை இரண்டு (2) பேரும், முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பத்துப் (10) பேரும், சுற்றுச் சூழல் முகாமைத்துவத்தில் முது விஞ்ஞானமாணிப் பட்டத்தை ஆறு (6) பேரும், வியாபார நிருவாகத்தில் முதுமாணிப் பட்டத்தை ஏழு (7) பேரும், கல்வியியலில் பட்டப்பின் டிப்ளோமா தகைமையை 157 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா தகைமையை இரண்டு (2) பேரும் பெறவுள்ளனர்.
பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் – ஐப்பசி 06 ஆம் திகதி, முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது அமர்வில், உள்வாரியாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 142 பேர் மருத்துவமாணி, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தையும், ஒருவர் மருத்துவ விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த ஏழு பேர் பொறியியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 104 பேர் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 33 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அமர்வில், வணிக முகாமைத்துவ பீடத்தில் இருந்து வணிகமாணி (சிறப்பு)ப் பட்டத்தை 89 பேரும், வணிகமாணிப் பட்டத்தை ஒருவரும் (1), வணிகமாணி (பொது)ப் பட்டத்தை ஒருவரும் (1) பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர். இவர்களுடன், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 143 பேர் விஞ்ஞானமாணி (பொது)ப் பட்டத்தையும், 38 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 20 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், ஒருவர் கணினி விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மூன்றாவது அமர்வில், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 265 பேர் வியாபார நிருவாக மாணி (சிறப்பு) பட்டத்தையும், ஏழு (7) பேர் வியாபார நிருவாக மாணி (பொது)ப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். இவர்களுடன், தொழில் நுட்ப பீடத்தைச் சேர்ந்த 21 பேர் உயிர்முறைமைத் தொழில் நுட்பமாணி (சிறப்புப்) பட்டத்தையும், ஒன்பது (9) பேர் பொறியியல் தொழில்நுட்பமாணி (சிறப்பு) பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இரண்டாம் நாள் – ஐப்பசி 07 ஆம் திகதி, முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது அமர்வில், வவுனியா பல்கலைக் கழகத் (முன்னைய யாழ். பல்கலைக்கழ வவுனியா வளாகத்) தின் வியாபார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 38 பேர் திட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 18 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும், 17 பேர் வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தையும், 48 பேர் வியாபார முகாமைத்துவமாணி கணக்கீடும் நிதியும் (சிறப்பு) பட்டத்தையும், பத்துப் (10) பேர் மனித வள முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தையும், மூன்று (3) பேர் வியாபாரப் பொருளியலில் வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர். இவர்களுடன், கலைப்பீடத்தைச் சேர்ந்த 99 பேர் கலைமாணிப் பட்டத்தையும், 79 பேர் கலைமாணி (பொது)ப் பட்டத்தையும், 28 பேர் மொழிபெயர்ப்புக் கற்கையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அமர்வில், வவுனியா பல்கலைக் கழகத் (முன்னைய யாழ். பல்கலைக்கழ வவுனியா வளாகத்) தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 24 பேர் தகவல் தொழில் நுட்பத்தில் விஞ்ஞானமாணி பட்டத்தையும், 28 பேர் விஞ்ஞானமாணி (பிரயோக கணிதமும் கணிப்பீடும் ) பட்டத்தையும், 24 பேர் சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 13 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், ஏழு (7) பேர் சுற்றுச் சூழலியலில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 21 பேர் தகவல் தொழில் நுட்பத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த நான்கு (4) பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். இவர்களுடன் யாழ். பல்கலைக்கழகக் கலைப் பீடத்தைச் சேர்ந்த 223 பேர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மூன்றாவது அமர்வில், கலைப் பீடத்தைச் சேர்ந்த 143 பேர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், 162 பேர் கலைமாணி (பொது)ப் பட்டத்தையும், ஐந்து (5) பேர் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும், எட்டுப் (8) பேர் நுண்கலைமாணிப் (சங்கீதம், நடனம் – பரதம், சித்திரமும், வடிவமைப்பும்) பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
மூன்றாம் நாள் – ஐப்பசி 08 ஆம் திகதி, முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது அமர்வில், கலைப்பீடத்தைச் சேர்ந்த 46 பேர் சட்டமாணிப் பட்டத்தையும், இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தைச் சேர்ந்த ஆறு (6) பேர் தாதியியலில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், ஏழு (7) பேர் மருந்தகவியலில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், இரண்டு (2) பேர் மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இவர்களுடன், விவசாய பீடத்தைச் சேர்ந்த 95 பேர் விவசாயத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அமர்வில், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஆறு (6) பேர் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமா தகைமைச் சான்றிதழையும், ஒருவர் (1) கணினி விஞ்ஞானத்தில் டிப்ளோமா தகைமைச் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வெளியேறிய 49 பேர் வணிகமாணி சிறப்புப் பட்டத்தையும், 13 பேர் வணிகமாணிப் பட்டத்தையும், 83 பேர் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், ஒருவர் (1) வியாபார முகாமைத்துவத்தில் உயர் டிப்ளோமா தகைமைச் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.