;
Athirady Tamil News

‘பொன்னியின் செல்வன்’ படம் 5,500 தியேட்டர்களில் வெளியானது..!!

0

கல்கி எழுதிய புகழ்பெற்ற சரித்திர நாவல் ‘பொன்னியின் செல்வன்’, பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக தயாராகி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. இந்தப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் திரையிடப்பட்டது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

விழாவானது, வெளியீடு
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் விழாவாக கொண்டாடினார்கள். அனைத்து தியேட்டர்களிலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளின் கட் அவுட்டுகள், பேனர்களை அவர்கள் ரசிகர்கள் வைத்து இருந்தனர். பல தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. பொதுவாக புதிய படங்கள் வெளியாவதற்கு முந்தைய நாள் நடிகர்கள், இயக்குனர்களுக்கு சிறப்பு காட்சி திரையிட்டு காட்டப்படும். ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை யாருக்கும் முன்கூட்டி திரையிட்டு காட்டாததால் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் அனைவரும் ரசிகர்களுடன் படத்தை தியேட்டர்களில்தான் பார்த்தார்கள்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், திரிஷா உள்ளிட்ட நடிகர்-நடிகைகளும் முதல் முறையாக நேற்றுதான் படத்தை பார்த்தனர்.

சாதனை படைத்தது, முன்பதிவு
தமிழ்நாடு முழுவதும் ‘பொன்னியின் செல்வன்’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்னால் ரசிகர்கள் கூட்டம் கூடியதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தியேட்டர்களில் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் யூடியூப் சேனல்களில் உள்ளவர்கள் கேமராவுடன் சென்று கருத்து கேட்க முயன்றனர். பட அதிபர்கள் சங்கத்தின் தடை காரணமாக கருத்து கேட்க தியேட்டர் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவில் ‘பொன்னியின் செல்வன்’ படம் சாதனை நிகழ்த்தி உள்ளது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த படம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. கனடாவில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை திரையிடக்கூடாது என்று எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அதையும் மீறி படம் அங்கு வெளியாகி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.