பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: காலை மோகினி அலங்கார வீதிஉலா;இன்று இரவு கருடசேவை..!!
திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கற்பக விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அப்போது லேசான தூறல் பெய்தது. கொட்டும் மழையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசாமி, ராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு உற்சவர்கள் ரெங்கநாயக்கர் மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆண்டாள் சூடிய மாலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கில் மோகினி அலங்கார வீதிஉலா, இரவு கருடசேவை உற்சவம் நடக்கிறது.