உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு!! (படங்கள்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு கடந்த வியாழக்கிழமை (29) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி வழக்கானது விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி சார்பாக சட்டத்தரணிகளான சஞ்சீப் சப்றீன் என்.எம் சஹீட் மூவரும் ஆஜராகி இருந்தனர்.
குறித்த விசாரணையின் போது மன்றில் பிரதான பரிசோதகரின் கைது தொடர்பில் ஆட்சேபனை எழுப்பி நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன் பிரதி வாதியான பொலிஸ் பரிசோதகரை குறித்த வழக்கில் இருந்து பிணையில் விடுதலை செய்யுமாறு விண்ணப்பங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக கல்முனை – சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் அம்பாறை பொலிஸ் உப கராஜின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”