2 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் !!
மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுலாத்துறையில் ஹோட்டல், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள பிரதான இடங்களாகும் என இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரியந்த திலகரத்ன தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், சூரிய கல திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தினால், அதற்கான ஹோட்டல் மேற்கூரைகளை வழங்க தயாராக உள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, சில நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் குறைக்கவும் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.