உ.பி. டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 22 பக்தர்கள் பலி – ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!!
உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் சாமி தரிசனம் செய்து விட்டு கும்பலாக டிராக்டரில் பக்தர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி கொண்டிருந்தனர். கான்பூர் மாவட்டத்தின் கதம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் சம்பவ இடம் சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உ.பி. சாலை விபத்து குறித்து தகவலறிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளார். முதல் மந்திரி ஆதித்யநாத் யோகி தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.