ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஹலோ எப்.எம். நிகழ்ச்சியில் திருமாவளவன் விளக்கம்..!!
17-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஹலோ எப்.எம்.க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட அவர், தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழ்நிலையில் சமூக நீதி குரல் ஓங்கி ஒலித்த தமிழ் நிலத்தில் மத அடிப்படையிலான குரல் ஒலிக்கத்தொடங்கி இருப்பது ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது என்றார். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வருகிற 2-ந் தேதி விதித்த தடையை வரவேற்பதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எந்த எல்லைக்கும் போவதற்கு தயங்காதவர்கள். அவர்கள் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியலை விதைப்பதால் அவர்களது அணிவகுப்பை எதிர்க்கிறோம் என்றார். இதையடுத்து, தி.மு.க. அமைச்சர்களின் பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகள் பல தரப்பிலும் விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அதேவேளையில் இதுபோன்ற விமர்சனங்கள் வருவதை அவர்கள் தவிர்க்கவேண்டும்’ என்றும் திருமாவளவன் பதில் அளித்தார். மேலும், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து, நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார்.