;
Athirady Tamil News

சிறுவர்களுக்கு வடக்கில் ஏன் இந்த அவலம் ?

0

அன்றன்றாடு உழைத்து வயிற்றுப் பிழைப்பை போக்கி வந்த குடும்பங்களே இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கொவிட் தொற்றுப் பரவலையடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அநேகமான குடும்பங்கள் நிலைகுலைந்து அன்றாட வாழ்கையை கொண்டு செல்லதற்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டுள்ளன. அதிலும் அடித்தட்டு மக்கள் என்று இல்லாது தற்போது நடுத்தர மக்களும் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் பொருளாதர நெருக்கடியால் பாடசாலை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து சிறுசிறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவிக்கிறது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது வாழ்க்கைச் செலவு என்பது கடுமையாக உயர்வடைந்துள்ளது. அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் உயர்ந்துகொண்டே செல்கின்றன. மக்களின் உழைப்பிற்கு மேலாக செலவுகள் அதிகரிக்கின்றன. சேமிப்பு என்பது எட்டாக்கனியாகவே காணப்படுகின்றது. இதனால் பிள்ளைகளின் கல்வி, உணவு போன்ற செலவுக்காக பெற்றோர்கள் அங்கலாய்க்கின்றனர். குறிப்பாக கூலித்தொழில் செய்து பிழைப்பை நடத்தும் குடும்பங்கள் பெரும் கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக வடமாகாணத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளை பராமரிக்க முடியவில்லையென சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் , சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலையே பெற்றோர்கள் அதிகளவான பிள்ளைகளை இவ்வாறு சிறுவர் இல்லங்களில் சேர்த்துள்ளதாகவும் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இவ்வாறு நிலைமை காணப்படும் போது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் இருப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு போஷாக்கான உணவு கிடைக்காத நிலையில் கல்வி அறிவு பாதிக்கப்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்திகளும் குறைவடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

வடக்கில் 2021 ஆம் ஆண்டு 158 பிள்ளைகள் இவ்வாறு சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியமையால் இந்த ஆண்டின் அரையாண்டு கால பகுதிக்குள் 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு யாழ்.மாவட்டத்தில் 124 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும் , மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் 08 பேருமாக 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தரவுகளில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த ஆண்டை விட இவ்வாண்டு சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் , சிறுவர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக பொருளாதார நெருக்கடியே காணப்படுகின்றது.

யுத்தம் இடம்பெற்று அபிவிருத்தியை நோக்கி நகர்ந்த வடக்கில் தற்போது இவ்வாறான பிரச்சினை தலைதூக்கியுள்ளதை எவ்வாறு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை துறைசார்ந்தோர் உள்ளிட்ட புத்திஜீவிகள் ஆராய வேண்டும். பெரும்பாலும் வடக்கில் யுத்தத்தையடுத்து பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்ற நிலையில், அந்தக் குடும்பங்களும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் நிச்சயம் சிக்கியிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

“ பொருளாதார நெருக்கடி காரணமாக எம்மால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதுள்ளதென பெற்றோரால் முன் வைக்கப்படும் கோரிக்கைகளை எமது திணைக்களம் பரிசீலித்து , பெற்றோரின் பொருளாதார நிலைமைகளை அறிந்து உண்மையில் அவர்களால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதா என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்க அனுமதிப்போம்” என்கிறார் வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் இ.குருபரன் .

இவ்வாறான நிலைக்கு நேரடி மற்றும் மறைமுக காரணியாக பொருளாதார நெருக்கடியே அமைந்துள்ள போதிலும் யுத்தகாலங்களில் பொருளாதாரத் தடைகளுக்குள் வாழ்ந்த சமூகம் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறுவதை தடுத்து நிறுத்த வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறான நிலையை உடனடியாக கட்டுப்படுத்த அரச திணைக்களங்கள், உரிய துறைசார் அதிகாரிகள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து பொறுப்புடன் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.