காங்கிரஸ் தலைவரானால், சோனியா காந்தி குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து செயல்படுவேன்- மல்லிகார்ஜுன் கார்கே..!!
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளரக்ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது சோனியாகாந்தி குடும்பத்தினரின் ஆதரவுடன் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்ற கருத்தை அவர் நிராகரித்தார். மேலும் அவர் கூறியதாவது: சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் கட்சித் தலைவராக வர விரும்பவில்லை. இதனால் அனைத்து மூத்த தலைவர்களும், இளைய தலைவர்களும் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினர். அவர்களின் அழைப்பு மற்றும் ஊக்கத்தினால் எனக்கு போட்டியிடும் உத்வேகம் கிடைத்தது.
கட்சித் தலைவராக பதவியேற்றால், சோனியா காந்தி குடும்பத்தினர் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் நல்ல விஷயங்களைச் செயல்படுத்துவேன். இப்போது காங்கிரசில் ஜி-23 என்று குழு இல்லை. அதில் இருந்த தலைவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக ஒற்றுமையாகப் போராட விரும்புகின்றனர்.எனக்கு அவர்கள் ஆதரவளிக்கின்றனர். நான் யாரையும் எதிர்ப்பதற்காக தேர்தல் களத்தில் இறங்கவில்லை. காங்கிரசை வலுப்படுத்தவும், கட்சி சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்லவும் தேர்தல் களத்தில் நிற்கிறேன். ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சியின் கொள்கையின்படி, வேட்புமனு தாக்கல் செய்த அன்றே மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். கட்சிக்காக நான் முழு நேரம் வேலை செய்து வருகிறேன்.
பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தால் மாலையில் அவை நடவடிக்கை நிறைவு பெறும் பொழுதுதான் வெளியே வருவேன். எதை செய்தாலும் நேர்மையாக செயல்படுவது என் வழக்கம். கட்சியில் சீர்திருத்தங்கள் செய்வது குறித்து ஒரு குழு அமைக்கப்படும். ஒருமித்த கருத்துடன் அனைத்து கொள்கை விஷயங்களையும் முடிவு செய்து நாங்கள் செயல்படுத்துவோம். பாஜக எப்போதும் காங்கிரஸைக் குறைத்து மதிப்பிடுகிறது. அவர்களுக்கு (பாஜக) எப்போது தேர்தல் நடந்தது? ஜே.பி. நட்டாவை யார் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்களின் தலைவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா? காங்கிரஸில் தேர்தல் அதிகாரம், பிரதிநிதிகள், வாக்குரிமை, வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இன்னும் அவர்கள் (பாஜக) தேர்தலை நடத்தவில்லை.
சோனியாகாந்தி குடும்பம் இந்த நாட்டிற்காக நிறைய தியாகம் செய்துள்ளது. சோனியா காந்தி அரசியலில் சேர விரும்பவில்லை. அவரது சேவை நாட்டுக்கு தேவை என்ற அடிப்படையில் வற்புறுத்தப்பட்ட பின்னரே கட்சியை அவர் பலப்படுத்தினார். 10 ஆண்டுகளாக, நாங்கள் ஆட்சியில் இருந்தோம், அவர் பிரதமராக முயற்சித்தாரா அல்லது ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி செய்தாரா? கட்சிக்காக அவரது தியாகம் மிகப்பெரியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.