ஐதராபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்; 3 பேர் கைது..!!
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பாக மலக்பேட்டையை சேர்ந்த அப்துல் ஜாகித் (வயது 39) என்பவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்கத்தினருடனான தனது தொடர்பை மீண்டும் புதுப்பித்து இருப்பதாகவும், அந்த அமைப்பின் அறிவுறுத்தலின்பேரில் நகரில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ஐதராபாத் போலீசார் உடனடியாக செயல்பட்டு அப்துல் ஜாகித்தை கைது செய்தனர். அத்துடன் சயீதாபாத்தை சேர்ந்த முகமது சமீருத்தின் (39), ஹூமாயூன் நகரை சேர்ந்த மாஸ் ஹசன் பரூக் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 4 கையெறி குண்டுகள், ரூ.5.41 லட்சம், 5 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வெடிகுண்டுகளை ஐதராபாத்தில் மக்கள் கூடும் இடங்களில் வீசி உயிர்ச்சேதம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த கையெறி குண்டுகள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினரிடம் இருந்து பெறப்பட்டவை என விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவரான அப்துல் ஜாகித் ஏற்கனவே ஐதராபாத்தில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர் ஆவார். அவர் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த அமைப்பினரின் நிதி மற்றும் ஆயுத உதவிகளை பெற்று இங்கே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததும், இங்குள்ள இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் 3 பேரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர். ஐதராபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.