சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர்..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, தலைமை செயலாளர் இறையன்பு அடையாறு மண்டலம், திருவான்மியூர் எல்.பி.சாலை கால்வாயில் நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் மற்றும் பெருங்குடி மண்டலம், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான் பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தார்.
அண்ணாநகர் மண்டலம், விருகம்பாக்கம் கால்வாயில் நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், ராயபுரம் மண்டலம், எழும்பூர் ரெயில் நிலையம் சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், வால்டாக்ஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விரைந்து முடியுங்கள்
ராயபுரம் மண்டலம், பேசின் பாலம் கால்வாயில் நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள், தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் கால்வாயில் நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் தேனாம்பேட்டை மண்டலம், ரங்கா சாலையில் நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, எபிநேசர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குனர் ராஜகோபால சுங்கரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.