பணவீக்கம், எரிபொருள் தட்டுப்பாடே காரணம்!!
ஆசியாவின் அதிகூடிய பணவீக்க விகிதம் மற்றும் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவை, இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த உலக உணவுத் திட்டம், நகர்ப்புற ஏழைகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களைப் போலவே பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக பணவீக்கம், அதிகரித்து வரும் விலைவாசி ஏற்றம், மின் வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை இலங்கை தொடர்ந்து அனுபவிப்பதாக உணவுத் திட்டம் குறிப்பிட்டது.
சமீபத்தைய அறிக்கைக்கு அமைய இலங்கையில் 6.2 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையிலுள்ள 10இல் 4 குடும்பங்கள் நாளாந்த உணவு வேளையை குறைத்துள்ளதுடன், செலவுகளை குறைத்தல், மருத்துவ செலவுகள் மற்றும் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பாதிருத்தல் போன்ற எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துவதாகவும் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சீரழிந்து வரும் உணவுப் பாதுகாப்பு, போஷாக்கு நிலைமை மற்றும் எதிர்வரும் பெரும்போகத்தில் போதிய அறுவடை கிடைக்காது என்ற வலுவான சாத்தியக்கூறுகள் தென்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, பல நாடுகள் குறிப்பாக உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு மேலதிக உதவிகளை வழங்குவதாக குறித்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரம் (யூஎஸ் எயிட்) மேலதிகமாக 20 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை அறிவித்த நிலையில், அந்த முகவரகத்தால் ஏறக்குறைய 92 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஐக்கிய இராச்சியம் 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் பெறுமதியான உதவிகளை வழங்கவுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன் யூரோக்களை மனிதாபினமான உதவியாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.