யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36வது பொதுப் பட்டமளிப்பு விழா!! (வீடியோ)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பகுதி, எதிர்வரும் இம்மாதம் 6ஆம்;, 7ஆம் , 8ஆம்; திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 46 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2ஆயிரத்து 378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விபரிக்கும் வகையிலான காணொளி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் இன்று வெளியிடப்பட்டது. அந்தக் காணொலியில் துணைவேந்தர் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் இம்மாதம் 6ஆம்;, 7ஆம் , 8ஆம்; திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 46 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2ஆயிரத்து 378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன
இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதல் இரண்டு நாட்களும் முறையே மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் முறையே இரண்டு அமர்வுகளுமாக எட்டு அமர்வுகளில் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடம், கலைப் பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், சேர் பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக்கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னைநாள் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம் மற்றும் பிரயோகவிஞ்ஞான பீடம் ஆகியவற்றால் வழங்கப்படும் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 46 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்கும் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 185 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை இரண்டுபேரும், முதுமெய்யியல்மாணிப் பட்டத்தை பதினொரு பேரும், சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஆறு பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஒருவரும் முதுவியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை ஏழு பேரும், கல்வியியலில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழினை 157 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழினை ஒருவரும் பெறவிருக்கின்றனர்.
பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் – ஐப்பசி 06 ஆம் திகதி, முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது அமர்வில், உள்வாரியாக, மருத்துவபீடத்தைச் சேர்ந்த 142 பேர் வைத்தியமாணி சத்திர சிகிச்சைமாணி பட்டத்தையும், ஒருவர் மருத்துவ விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த ஏழு பேர் பொறியியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த 104 பேர் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 33 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அமர்வில், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்திலிருந்து வணிகமாணி (சிறப்பு) பட்டத்தை 89 பேரும், வணிகமாணிப் பட்டத்தை ஒருவரும், வணிகமாணி (பொது)ப் பட்டத்தை ஒருவரும் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர். இவர்களுடன், விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த 143 பேர் விஞ்ஞானமாணி (பொது)ப் பட்டத்தையும், 38 பேர் கணனி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 20 பேர் கணனி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், ஒருவர் கணினி விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மூன்றாவது அமர்வில், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த 265 பேர் வியாபார நிர்வாகமாணி (சிறப்பு)ப் பட்டத்தையும், ஏழு பேர் வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். இவர்களுடன், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 21 பேர் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணி பட்டத்தையும், ஒன்பது பேர் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணி பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இரண்டாம் நாள் – ஐப்பசி 07 ஆம் திகதி, முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நான்காவது அமர்வில், யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னைநாள் வவுனியா வளாகத்தின் வியாபாரகற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 38 பேர் செயற்திட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 18 பேர் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 78 பேர் வியாபார முகாமைத்துவ சிறப்புமாணிப் பட்டத்தையும் பெறுகின்றனர். அதேவேளை கலைப்பீடத்தைச் சேர்ந்த 99 பேர் கலைமாணிப் பட்டத்தையும், 79 பேர் கலைமாணி (பொது)ப் பட்டத்தையும், 28 பேர் மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணி பட்டத்தையும் இவ்வமர்வில் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஐந்தாவது அமர்வில், யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னைநாள் வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 24 பேர் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணி பட்டத்தையும், 4 பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 28 பேர் பிரயோக கணிதம் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தையும், 24 பேர் சூழல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 13 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 07 பேர் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தையும், 21 பேர் தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தையும், பெறவிருக்கின்றனர். அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடத்தைச் சேர்ந்த 223 பேர் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும் இவ்வமர்வில் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆறாவது அமர்வில், கலைப் பீடத்தைச் சேர்ந்த 143 பேர் சிறப்புக் கலைமாணி பட்டத்தையும், 162 பேர் கலைமாணி (பொது)ப் பட்டத்தையும், ஐந்து பேர் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும், எட்டுப் பேர் நுண்கலைமாணி (சங்கீதம், சித்;திரமும்,வடிவமைப்பும்) பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
மூன்றாம் நாள் – ஐப்பசி 08 ஆம் திகதி, முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஏழாவது அமர்வில், கலைப்பீடத்தைச் சேர்ந்த 46 பேர் சிறப்பு சட்டமாணிப் பட்டத்தையும், இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தைச் சேர்ந்த ஆறுபேர் தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தையும், ஏழுபேர் மருந்தகவியல்மாணி சிறப்புப் பட்டத்தையும், இரண்டுபேர் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞான சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தையும் இவர்களுடன், விவசாயபீடத்தைச் சேர்ந்த 95 பேர் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள எட்டாவது அமர்வில், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஆறு பேர் விஞ்ஞானத்தில் உயர் தகைமைச் சான்றிதழினையும், ஒருவர் கணினி விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழினையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தில் கல்விகற்று வெளியேறிய 49 பேர் வணிகமாணி சிறப்புப் பட்டத்தையும், 14 பேர் வணிகமாணிப் பட்டத்தையும், 83 பேர் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
• பட்டமளிப்பு விழாவுக்கு வழமைபோன்று பட்டம் பெறும் மாணவர்களுடன், பெற்றோரும் கலந்துகொள்ள வசதியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பட்டம் பெறுகின்ற மாணவர்கள், மற்றும் விருந்தினர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு விநயமாகக் கேட்டுகொள்கின்றோம்.
• விழா மண்டபத்தினுள் பட்டதாரிகள், அழைக்கப்பட்ட பெற்றோர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வீடியோ மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்கள் சார்பாக அனுமதிக்கப்பட்ட விருந்தினர்கள் புகைப்படம் எடுத்தல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
• பட்டமளிப்பு நிகழ்வுகள் அனைத்தும் எமது பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் வாயிலாகவும், முகப்புத்தகம், யூடியூப் சனல்களின் ஊடாகவும் நேரலையாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட்டமளிப்பு விழா சுமுகமாக நிறைவுபெறுவதற்கு பல்கலைக்கழக சமூகம் அனைவரது ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறோம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”