இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் நாட்டு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து சீனாவுக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தை டெல்லியில் தரை இறக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அந்த விமானம் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ஜெய்ப்பூரில் தரை இறங்கவும் அனுமதி கிடைக்கவில்லை, இதையடுத்து அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன.
இந்திய விமானபடையை சேர்ந்த 2 விமானங்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்ட விமானத்தை கண்காணித்தது. சீனாவை நோக்கி சென்ற ஈரான் விமானத்தை ஜோத்பூர் முதல் பஞ்சாப் எல்லை வரை இந்திய விமானப்படை விமானங்கள் தொடர்ந்து கண்காணித்தபடி இருந்தது. விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை. ஈரானில் தற்போது ஹிஜாப் உடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்நாட்டு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.