டெல்லியில் பிரதமர் இல்ல கட்டுமான பணி டெண்டர் மீண்டும் ரத்து – மத்திய அரசு அறிவிப்பு..!!
டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், ராஜபாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில் புதிய பிரதமர் இல்ல கட்டுமான பணிகளும் அடங்கியுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு அருகே ரூ.360 கோடியில் பிரதமர் இல்லம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தகுதிக்கு முந்தைய டெண்டருக்கு கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி மத்திய பொதுப்பணித்துறை அழைப்பு விடுத்திருந்தது. நிர்வாக காரணங்களுக்காக பின்னர் இது அதே மாதம் 22-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி மீண்டும் தகுதிக்கு முந்தைய டெண்டர்களை மத்திய பொதுப்பணித்துறை வெளியிட்டது. ஆனால் இதுவும் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவித்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாக மத்திய பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் மீண்டும் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.