புதிதாக 25,000 தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல்..!!
டிஜிட்டல் இந்தியா தொடர்பான மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மூன்று நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழில்நுட்பத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையிலான முக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் சென்றடைய தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். நாடு முழுவதும் புதிதாக 25,000 தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவ 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார்.
அடுத்த 500 நாட்களில் இந்த கோபுரங்கள் அமைக்கப்படும் என்றார். மாநிலங்களின் மூலதனச் செலவினங்களுக்காக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தொலைத் தொடர்புத்துறையில் வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் உகந்த கொள்கைகளை மாநிலங்கள் வகுத்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் இணைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.