10 பசுக்களை கொன்ற புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்- அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பாராட்டு..!!
கேரள மாநிலம் மூணாறு மலைப்பகுதியில் நயமக்காடு பகுதியில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி ஒன்று புகுந்தது. அந்த புலி கிராமத்தில் உள்ள 10 பசுக்களையும் அடித்து கொன்றது. இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மேலும் புலியை பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் நயமக்காடு கிராமத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் புலியை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து நயமக்காடு கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இதற்காக நயமக்காடு பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டது. அதில் புலியின் நடமாட்டத்தை கண்காணித்த அதிகாரிகள் அந்த பகுதியில் புலியை பிடிக்க கூண்டுகள் வைத்தனர். நேற்றிரவு இந்த கூண்டில் புலி சிக்கியது. உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர் கூண்டில் சிக்கிய புலியை பத்திரமாக பிடித்து சென்றனர். புலியை பிடித்த வனத்துறையினரை கிராம மக்கள் பாராட்டினர்.