இறுதி பட்டியலில் 3 பேருக்கு இடம்: அமைதிக்கான நோபல் பரிசு இந்தியர்களுக்கு கிடைக்குமா..!!
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நாளை (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளோரின் இறுதிப்பட்டியலில் 3 இந்தியர்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் டெல்லியை சேர்ந்த ஆல்ட்நியூஸ் செய்தி நிறுவன இணை நிறுவனர்கள் பிரதிக் சின்கா, முகமது ஜூபைர் மற்றும் எழுத்தாளர் ஹர்ஷ் மாண்டர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. உண்மை சரிபார்ப்பு பணிகளை செய்து வரும் ஆல்ட்நியூஸ் இணை நிறுவனர்கள் இருவரும், இந்தியாவில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அயராது பாடுபட்டதாக கூறப்பட்டு உள்ளது. இதில் முகமது ஜூபைர், மத உணர்வுகளை புண்படுத்தியதாக கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். இது உலக அளவில் பெரும் கண்டனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைப்போல மத பிரிவினைவாதம், வன்முறை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் பிரபல எழுத்தாளர் ஹர்ஷ் மாண்டர் மற்றும் அவரது அன்பின் கேரவன் பிரசார இயக்கமும் இந்த பட்டியலில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களை தவிர பல்வேறு வெளிநாட்டு பிரபலங்களும் இந்த பட்டியலில் உள்ளனர். இதில் இந்தியர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா? என்பது நாளை தெரியும்.