அம்மான் படையணி உதயம்!!
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் .
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்மான் படையணி என்ற இளைஞர் படையணியை உருவாக்கி இருக்கின்றனர். இதற்கு பலவிதமான கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் எழுப்பப்பட்டிருந்தன.
இந்த அம்மான் படையணி என்பது இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்கள் மூலம் சில வேலைத்திட்டங்களை வடக்கு, கிழக்கு மண்ணில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது தலைவர் கருணாவின் நெறிப்படுத்தல். வடக்கு ,கிழக்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் ,உலகம் முழுவமுதும் விரிவடைந்து உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் எங்களுக்கு பின்னால் அணிவகுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.இந்த இளைஞர் பட்டாளம் என்பது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும்.
உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தினை எடுத்துக்கொண்டால் இங்கு போதைப்பொருள் முக்கிய விடயமாக உள்ளது .
எனவே போதைப்பொருள் ஒழிப்பு என்பதனை அம்மான் படையணி கையில் எடுக்க இருக்கிறது.எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை.
இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம். இதனை கட்டுப்படுத்த அம்மான் படையணி செயற்படும்.
சட்டத்தினை நாங்கள் கையில் எடுக்கின்றோம் என்ற சில வதந்திகள் உலா வருகின்றது. ஆனால் இது அவ்வாறு இல்லை. இவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்.
வெறுமனே போதை தடுப்பு இல்லாமல் சமூக செயற்பாடுகள்,உதவித் திட்டங்கள், சிரமதானங்கள் போன்றவற்றில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். இந்த கட்டமைப்பு சரியான முறையில் செயற்படுத்தப்படும்.
எங்கள் இந்த குழுவினை சமூக சீர்திருத்த குழு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.சட்டத்தினை கையில் எடுப்பது எங்கள் நோக்கம் அல்ல.
எங்கள் தலைவரின் கருத்தினை பொறுத்த வரையில் ஒரே ஒரு தேசியத்தலைவன் பிரபாகரன் தான்.இது உலகம் அறிந்த விடயம்.
கருணா அம்மான் மற்றும் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்குமிடையில் அண்ணன் தம்பி சண்டையே தவிர மாறுபட்ட கருத்துக்கள் இருந்ததில்லை. நாங்கள் பிரியவில்லை . கருணா அம்மான் பிரிந்து விட்டார் என்று சொல்லுகிறார்கள் கருணா அம்மான் பிரிந்து விட்டதாக எங்கேயாவது கேள்விப்பட்டுள்ளீர்களா?
சுப.தமிழ்ச் செல்வன் தான் கருணா அம்மானை நீக்கி இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கிறாரே தவிர கருணா அம்மான் பிரிந்து செல்லவில்லை.அவரை இந்த கேள்வி கேட்டால் இந்த பதிலினை தான் கூறுவார்.
பிரதேசவாதம் என்பது முற்றிலும் அழிக்கப்பட வேண்டிய விடயமாகும்.மாகாணங்களுக்கு இடையிலான பிரிவு தேவையில்லை சில அரசியல்வாதிகள் இந்த பிரதேச வாதத்தினை முன்னெடுத்து வருகிறார்கள்.
அவர்களால் பிரதேசத்தினை விட்டு வெளியில் சென்று அரசியல் செய்ய முடியாத நிலை இருக்கிறது.அதற்காக பிரதேசங்களுக்குள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக அரசியலில் இதனை எடுக்கிறார்கள்.புலம்பெயர் மண்ணிலும் இது இருக்கிறது. இது முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”