;
Athirady Tamil News

காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலி- இந்திய தயாரிப்பு இருமல் மருந்துகள்தான் காரணமா ? மத்திய அரசு தீவிர விசாரணை..!!

0

மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இதன் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறும் போது, “குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரான நச்சுத்தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்” என கருதப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார். அரியானாவை சேர்ந்த மெய்டன் என்ற மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக புரோ மெத்சைன், முகா பெல்ஸ்மாலின் மகாப் மேக்தின் என்ற 4 மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மருந்தில் டயத்லைன் கிளை கோசில் மற்றும் எதிலன் கிளைகோசில் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது காம்பியாவை போல வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளதை தொடர்ந்து மத்திய அரசு இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்கான விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த மருந்துகளை தயாரித்த மெய்டன் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மைகள் மற்றும் விவரங்களை கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட விசாரணையில் அந்த மருந்து நிறுவனம் குறிப்பிட்ட மருந்து தயாரிப்புகளுக்கு உரிமம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் இதுவரை காம்பியாவுக்கு மட்டுமே தயாரித்து ஏற்றுமதி செய்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில் தான் இதன் முழு விவரமும் தெரியவரும். இந்தநிலையில் 4 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.