2 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைத்தார்..!!
ரேஷன் கடைகளை பொலிவுற செய்வதன் ஒரு பகுதியாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ இண்டேன் சிறிய ரக கியாஸ் சிலிண்டர்கள் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் முதல் கட்டமாக விற்பனை தொடங்கப்பட்டு பின்னர் ரேஷன் கடைகள் மூலமாக அதன் விற்பனை விரிவுப்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு வளாகத்தில் சுயசேவை பிரிவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ இலகு ரக சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்து, விற்பனையை நேற்று தொடங்கிவைத்தார்.
கட்டணம் எவ்வளவு?
இலகு ரக கியாஸ் சிலிண்டர் பலதரப்பட்ட மக்களும் பயனுறும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோ கியாஸ் சிலிண்டர் புதிய இணைப்புக்கு ரூ.961.50-ம், கியாஸ் நிரப்புவதற்கு (ரீபில்) ரூ.253.50-ம், 5 கிலோ கியாஸ் சிலிண்டரின் புதிய இணைப்புக்கு ரூ.1,528-ம், கியாஸ் நிரப்புவதற்கு ரூ.584-ம் இந்தியன் ஆயில் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.
2 கிலோ மற்றும் 5 கிலோ கியாஸ் சிலிண்டர்களை பெறுவதற்கு முகவரி சான்று எதுவும் சமர்ப்பிக்க தேவை இல்லை. ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மட்டும் காண்பித்து, இதனை பெற்றுக்கொள்ள முடியும்.
வழிகாட்டி
அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-
இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறையில் தமிழகம்தான் வழிகாட்டியாக இருக்கிறது. அதேபோல நாட்டிலேயே முதல்-அமைச்சர்களுக்கெல்லாம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் இந்த திட்டம் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. குறைந்த எடையளவு கியாஸ் சிலிண்டர்களை வியாபாரிகளிடம் சேர்த்திருக்கிறோம். எதிர்காலத்தில் அனைவரும் பாராட்டும் திட்டமாக இது அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டோர்
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், தலைமை பொதுமேலாளர் (திரவ பெட்ரோலிய வாயு) எஸ்.தனபாண்டியன், இந்தியன் எண்ணெய் கழக தமிழ்நாடு மாநில நிர்வாக இயக்குனர் வீ.சி.அசோகன், பெருநகர சென்னை மாநகராட்சி பணிக்குழு தலைவர் நே.சிற்றரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.