நகர்ப்புற வீடுகளில் செங்குத்து தோட்டம்-மண்ணில்லா சாகுபடிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்..!!
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் இந்த ஆண்டு ரூ.27½ கோடி நிதியில் செயல்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்களில் வீட்டிற்கு தேவையான கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு 40 சதுர அடி பரப்பில் செங்குத்து தோட்டம் அமைக்கப்படுகிறது. இதற்காக நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் ஆகிய நகரங்களில் 250 அலகுகள் அமைப்பதற்கு அலகு ஒன்றுக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.37.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செங்குத்து தோட்ட அலகானது புற ஊதா கதிர்வீச்சு பாதுகாப்புடன் கூடிய எம்.எஸ். பிரேம் கட்டமைப்பு, 80 பி.வி.சி தொட்டிகள், 160 ஜி.எஸ்.எம். நைலான் பின்னப்பட்ட ஜியோ டெக்ஸ்டைல் பேப்ரிக், தேங்காய் நார்கழிவு, செம்மண், மண்புழு உரம், பெரிலைட், இயற்கை உரம் கலந்த மண்ணற்ற ஊடகக்கலவை, சொட்டு நீர்பாசன அமைப்பு மற்றும் கீரைகள், கொத்தமல்லி, முள்ளங்கி, வெங்காயம், புதினா போன்றவற்றின் விதைகள் மற்றும் நடவுச்செடிகள் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகும். மானியம் பெறலாம் மேலும், நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மண்ணிற்கு பதிலாக கனிம ஊட்டச்சத்து நிறைந்த நீர்ம வளர்ப்பு ஊடகக்கரைசலுடன் மெருகேறிய பளிங்கு உருள்மணிகள் அல்லது கூழாங்கற்கள், தென்னை நார்க்கழிவு போன்றவற்றை பயன்படுத்தி கீரை வகைகளை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. ஹைட்ரோபோனிக்ஸ் அலகானது என்.எப்.டி. சேனல், துருப்பிடிக்காத இரும்பிலான தாங்கும் அமைப்பு, 40 வாட் நீர் மூழ்கி மோட்டார், பெர்லைட் கலவை, 3 மாதத்திற்கான ஊட்டச்சத்து, 80 வலை அமைப்பிலான தொட்டிகள், கார அமில நிறங்காட்டி மற்றும் விதைகள் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகும். ஆர்வமுள்ள பொதுமக்கள் இவைகளை அமைத்து பின்னேற்பு மானியம் பெற www.tnhorticulture.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.