படகில் கடத்தி வந்த 200 கிலோ போதை பொருளுடன் 6 வெளிநாட்டவர்கள் கைது..!!
கேரளாவில் கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் கடத்தல் தடுப்பு குழுவினருடன் கடற்படையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கொச்சி துறைமுகத்தில் இருந்து கடற்படை அதிகாரிகள் ரோந்து கப்பலில் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொச்சியில் இருந்து சுமார் 1200 கடல் மைல் தொலைவில் ஒரு படகு சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்தது. கடற்படை அதிகாரிகள் அந்த படகை சுற்றி வளைத்து நிறுத்தினர். அந்த படகின் ஆவணங்களை பரிசோதித்த போது அந்த படகு ஈரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகு என தெரியவந்தது. படகில் 6 பேர் இருந்தனர். அவர்கள் ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த படகை அதிகாரிகள் சோதனை செய்த போது 200 கிலோ போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ஒரு கிலோவுக்கு ரூ. 2 கோடி ஆகும். அதன்படி படகில் இருந்த மொத்த போதை பொருளின் மதிப்பும் ரூ.400 கோடி ஆகும். இதையடுத்து அந்த படகையும், அதில் இருந்த போதை பொருளையும் பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இதுபற்றி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வெளிநாட்டினர் 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதை பொருளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.