ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்..!!
இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயினை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,200 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெராயின் பாகிஸ்தான் வழியாக ஈரான் நாட்டு படகில் ஏற்றப்பட்டு, இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை மூத்த அதிகாரி சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட பாக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தனித்துவமான அடையாளங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுக்கடல் பகுதியில் இலங்கை கப்பலுக்கு இந்த போதை பாக்கெட்டுகள் மாற்றப்பட இருந்த நேரத்தில் அவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் குமார் சிங் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களும், போதைப் பொருள் பாக்கெட்டுகளும் கொச்சி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.