;
Athirady Tamil News

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது..!!

0

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும், உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

நீதிபதி கே.சந்துரு
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு அறிக்கை பெற்றது. அதன்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி, கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி கூடிய அமைச்சரவை முன்பு கொண்டுவரப்பட்டது.

கவர்னர் ஒப்புதல்
அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசு அதை அனுப்பி வைத்தது. அந்த அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதியன்று அரசிதழில் அந்த அவசர சட்டத்துக்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை, அந்த அவசர சட்டத்தின் மூலம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்ட அம்சங்கள் வருமாறு:-

ஆசிரியர்களிடம் சர்வே
சமீபத்தில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதில், மாணவர்களின் கல்வியிலான கவனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74 சதவீத ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களின் அறிவுத் திறனில் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், எழுத்துத் திறன், படைப்பாற்றல் திறன் குறைந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 67 சதவீத ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாணவர்களிடையே சுயமரியாதை குறைந்திருப்பதையும், அதிக கோபமுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள்என்பதையும் 77 சதவீதம்ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

நேரும் பாதிப்புகள்
பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தம் 10 ஆயிரத்து 735 இ-மெயில் வந்ததில் 10 ஆயிரத்து 708 பேர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். இவற்றையெல்லாம் அரசு கருத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களை, திறனை சோதிக்கும் பழைய அளவுகோலின்படி கணக்கிடக்கூடாது என்றும் அதை தற்போதைய தொழில்நுட்பங்களின்படி வேறுபடுத்தி ஆய்வு செய்தது. அந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவரை பண ஆசைகாட்டி அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும், அதன் மூலம் உடல்நலனுக்கு மட்டுமல்லாமல் பொருளாதார சுரண்டலுக்கு வழிகோலுகிறது என்றும், அதனால் சமூக, பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும் தெரிகிறது. குறிப்பாக, இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் எதிர்மறை குணங்கள் உருவாகின்றன. திறன் குறைபாடு ஏற்படுகிறது. இந்த விளையாட்டுகளால் தற்கொலை, குடும்பங்கள் சிதறுவது, பொது சுகாதார பாதிப்பு, சமூக ஒழுக்கம் கெடுவது போன்ற பாதிப்புகள் நேர்கின்றன.

ஆணையம் நியமனம்
நீதிபதி கே.சந்துருவின் அறிக்கையையும், சர்வே அறிக்கையையும், பொதுமக்கள் உள்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும் அரசு கவனமுடன் பரிசீலித்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்துள்ளது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடக்காததால் அதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பெயர், ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை அவசர சட்டம்-2022’ என்பதாகும். உடனடியாக இது அமலுக்கு வருகிறது. இந்த சட்டப்படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

ஆணையத்தின் பணி
இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களை ஆணையம் கண்காணிக்கும். அவர்களைப் பற்றிய தரவுகளை பராமரிக்கும். அவசர சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற, தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டம்-2000-ஐ பயன்படுத்தவும் அரசை ஆணையம் கேட்டுக்கொள்ளும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை தீர்த்து வைக்கும். சிவில் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம்போல (சம்மன் அனுப்புவது, சாட்சி பதிவு செய்வது, ஆவணங்களை கேட்டு வாங்குவது) ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

சூதாட்டத்திற்கு தடை
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டம் மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது. மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகின்றன. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக்கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

தண்டனைகள்
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மீண்டும் தவறு செய்தால்…
இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒருமுறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிரந்தர சட்டமாவது எப்போது?
இந்த அவசர சட்டம் 3-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் 17-ந் தேதி சட்டசபை கூடுகிறது. எனவே இந்த அவசர சட்டம் இந்த கூட்டத்தொடரில் சட்ட மசோதாவாக கொண்டுவரப்படும். அங்கு எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, சட்டசபையில் அந்த மசோதா நிறைவேற்றப்படும். அந்த மசோதா பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகு அது நிரந்தர சட்டமாகி விடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.