சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து வாகனங்கள் மூலமும் நடைபயணமாக செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலுபிரி சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பரிசோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் இலவச தரிசன வரிசை 5 கி.மீட்டரை தாண்டி நீண்டு கொண்டு உள்ளது. திருப்பதியில் பெய்து வரும் மழையின் காரணமாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:- இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆவதால் பக்தர்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயல்வதை தவிர்க்க வேண்டும். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பக்தர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்து மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வந்தால் சிரமமின்றி தரிசனம் செய்து கொண்டு செல்லலாம். தரிசனத்திற்கு வந்துள்ள பக்தர்கள் கூட்டம் குறையும் வரை தங்கும் விடுதிகளில் பொறுமையாக காத்திருந்து தரிசனத்திற்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். திருப்பதியில் நேற்று 70,007 பேர் தரிசனம் செய்தனர். 42,866 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.25 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.