குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேனர்களை கிழித்து எறிந்த பாஜக தொண்டர்கள்..!!
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தலைமையில் வதோதராவில் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், கெஜ்ரிவாலின் இந்த யாத்திரைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர் இந்து விரோத கருத்துக்களை கூறியதாக கூறி பாஜகவினர் இன்று வதோதராவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் படம் அச்சிடப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். இந்த அத்துமீறல் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக பாஜகவினருக்கும் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் ஊழல் உருவானது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் துர்கேஷ் பதக் கூறுகையில், குஜராத்தில் பாஜகவின் தோல்வி பயத்தை இந்த அராஜகம் காட்டுகிறது என்றார்.