தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசம்: மாட்டை கடித்துக்கொன்ற புலி..!!
தாளவாடி அருகே மாட்டை புலி கடித்து கொன்றது. தொடர் சம்பவத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
புலி அட்டகாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் அவ்வப்போது அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளவாடி அருகே கணேசபுரம் பகுதிக்குள் புகுந்த புலி, அங்கு ஒரு பசு மாட்டை கடித்துக்கொன்றது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் புலி மேலும் ஒரு பசு மாட்டை கடித்து கொன்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மாட்டை கொன்றது
மல்லையன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம்மா (வயது54). விவசாயி. இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். நாகலிங்கம்மாவின் பசு மாட்டை வழக்கம் போல் அருகில் உள்ள நிலத்தில் அவரது மகன் மகேஷ் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு புலி அங்கு வந்தது. பின்னர் புலி அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டின் மீது பாய்ந்தது. அதன்பின்னர் மாட்டை இழுத்து சென்று வனப்பகுதியில் வைத்து கடித்து கொன்றது. இதை பார்த்து அச்சம் அடைந்த மகேஷ் அங்கிருந்து ஓடினார். பின்னர் இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகள் மற்றும் ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தார்.
விவசாயிகள் பீதி
அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். அப்போது வனத்துறையினரிடம் விவசாயிகள், புலி தாக்கி இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.