தாய் நாட்டிற்கான கடமைகளை மாணவர்கள் மறக்க கூடாது- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுரை..!!
பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா சண்டிகரில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இஸ்ரோ முன்னாள் தலைவர் சதீஷ் தவான், ஐஐடி டெல்லி இயக்குனர் ஆர்.என்.டோக்ரா, ஏவுகணை தொழில்நுட்ப நிபுணர் சதீஷ் குமார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆகியோர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பது பெருமை அளிப்பதாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிக உத்வேகம் அளிக்க தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒரு நல்ல கல்வி நிறுவனம் என்பது ஒவ்வொரு மாணவர் மீதும் கவனம் செலுத்தி, நல்ல உள்கட்டமைப்புடன், ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கமும் இதுதான். வரம்புகள் இல்லாத வாய்ப்புகள் மற்றும் சாத்தியக் கூறுகள் நிறைந்த உலகில் நீங்கள் (மாணவர்கள்) அடியெடுத்து வைக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டிற்கான உங்கள் கடமைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம், நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள் நீங்களே. இந்த சிறப்புமிக்க கல்வி நிறுவனத்தில் பெற்ற அறிவை நீங்கள் மனிதகுல சேவையிலும் பயன்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக இளைஞர்களின் தார்மீகக் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.